லைஃப்ஸ்டைல்
உடல் மெலிந்த பெண்களின் ஏக்கங்கள்.. எதிர்பார்ப்புகள்..

உடல் மெலிந்த பெண்களின் ஏக்கங்கள்.. எதிர்பார்ப்புகள்..

Published On 2021-04-23 08:00 GMT   |   Update On 2021-04-23 08:00 GMT
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான்.
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான். காதல் உணர்வுகள் தலைதூக்கும் டீன்ஏஜ் காலகட்டத்திலும், அதன் பின்பு திருமணத்திற்கு தயாராகும் பருவத்திலும் பெண்களுக்கு தங்கள் உடல்மீது அதிக அக்கறை ஏற்படுகிறது.

உடல் மெலிந்து காணப்படும் பெண்கள் உணவாலும், மருந்து மாத்திரைகளாலும் உடல் எடையை அதிகரிக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உடல்வாகு பொதுவாக அவரவர் பாரம்பரியத்தை பொறுத்தது. சில பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்கள் உடலில் தசைபோடாது. அதற்கு காரணம் அவர்களது பாரம்பரியம்தான்.

இதில் முதலில் கவனிக்கத்தகுந்த விஷயம், பெண்கள் தங்கள் உடல் ஒல்லியானதா? அல்லது போதுமானதா? என்பதை தெளிவாக அறியவேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை வைத்துக்கொண்டு ஒல்லியாக இருப்பதாக முடிவுசெய்துவிடக்கூடாது. அதை துல்லியமாக தெரிந்துகொள்ள ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ துணைபுரியும். அந்த அளவு 18.5 முதல் 24.9 வரை இருந்தால் உங்கள் உடல்வாகு போதுமானதாக இருப்பதாகவே அர்த்தம். நீங்கள் அதற்கு மேல் எடைகூட வேண்டியதில்லை.

ஒல்லியாக இருக்கும் சில பெண்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு மதிய நேரங்களில் தூங்கினால் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உடலை குண்டாக்கக்கூடும் என்றாலும், அப்போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

பின்விளைவுகளற்ற முறையில் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்கள், முந்திரி-பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகைப் பொருட்கள், கடலை, முழு பயறு வகைகள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் உணவில் அசைவம் சேர்க்கலாம். தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். நெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்சா போன்ற உணவு வகைகளும் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும்.

ஒல்லியான பெண்கள் தினமும் சாப்பிடும் உணவின் கலோரி கணக்கை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1900 கலோரி தினமும் தேவை. ஒல்லியாக இருப்பதை தெளிவாக அறிந்துகொண்டால் அதைவிட கூடுதலாக தினமும் 1000 கலோரி எடுத்துக்கொள்ளலாம். மூன்று நேர உணவு என்பதற்கு பதில் தினமும் ஆறு நேரமாக சாப்பிடுங்கள். அது சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும் என்பது மிக அவசியம்.

பெரும்பாலான பெண்களிடம் முரண்பாடான கருத்து ஒன்று பல காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது, ஒல்லியாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்பது. ஒல்லியோ, குண்டுவோ எதுவானாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்க, ரத்த ஓட்டத்தை சீராக்க, நன்றாக பசியெடுக்கச்செய்ய உடற்பயிற்சி தேவை. ஆனால் எந்த உடற்பயிற்சியையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்யவேண்டியதில்லை.

உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு பொறுமை மிக அவசியம். ஒரு சில மாதங்களிலே எதிர்பார்த்ததுபோல் உடல் எடை உடனே அதிகரித்துவிடாது. அப்படி அதிகரித்துவிடவும்கூடாது. உணவு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவை பலன் தந்து உடல் எடை அதிகரிக்க பொறுத்திருக்கவேண்டும். பெண்கள் ரொம்ப ஒல்லியாக இருப்பதாக கருதினால், டாக்டரிடம் ஒருமுறை உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.
Tags:    

Similar News