கோவில்கள்
திருவானைக்காவல்

பவுர்ணமியில் சிறப்பு பூஜை செய்யப்படும் கோவில்கள்

Published On 2022-02-16 07:43 GMT   |   Update On 2022-02-16 07:43 GMT
திருச்சி திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
* திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது. இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்திற்குப் பிரம்ம தீர்த்தம் என்று பெயர். சந்திர கிரகணம் மற்றும் பவுர்ணமி அன்று இக்குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி இறைவனின் அருளைப் பெறுவார்கள் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

* திருச்சி திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

* அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும். இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர். இவர்களின் விருப்பப்படியே மன்மதன் தன் பானத்தை மகேஸ்வரன்மேல் தொடுத்தான். இச்செயலால் கோபம் கொண்ட ருத்ரன் தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். இறைவனின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் பந்தநலலூரக்கும் இடையே உள்ள திருவாளப்புத்தூருக்குத் தென் கிழக்கே உள்ள வரதம்பட்டல் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் மன்மத பரமேஸ்வர லிங்கத்திற்குப் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.

* திருநாரையூரில் திருத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று இரவில் இங்குள்ள பொள்ளாப்பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் அதே சமயத்தில் பிரகாரத்தின் ஓரிடத்தில் குத்து விளக்கை ஏற்றி வானத்திலுள்ள சந்திரனுக்குப் பூஜை செய்து தீபாராதனை காட்டும்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

* வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வன்னவேடு என்ற வன்னிக்காடு என்ற தலம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு லகுசண்டி ஹோமம் செய்கிறார்கள். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம். பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.

* திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை. இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும். பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.

* ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

* நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தக்கலை திருத்தலத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் தென்கிழக்கு மூலையில் அரசமடித்தடியில் உள்ள விநாயகர் ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயன காலத்தில் வெள்ளையாகவும் தை முதல் ஆனி வரையிலான உத்தராயணக் காலத்தில் கறுப்பாகவும் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இதற்குக் காரணம் இந்த விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லினால் வடிக்கப்பட்டது. இதைப் போலவே அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் உள்ள மூலஸ்தான பிரகாரத்தில் சந்திரகாந்த கல் இருப்பதினால் எப்போதும் இந்த இடம் குளுகுளுவென்று ஏர்கண்டிஷன் செய்தது போல் இருக்கும். சந்திர காந்தக்கல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்தக் கல்லில் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, பெருமாள், ராமர், அம்மன், சந்திரன் போன்ற சிலைகளை வடித்தால் அருட்கடாட்சம் மிகுந்திருக்கும்.

* ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை. பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.

* திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை. இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது. இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.

* சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலர்தரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரி வலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

* குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

Tags:    

Similar News