செய்திகள்
மத்திய மந்திரி நிதின் கட்காரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை தொடர்புபடுத்த வேண்டாம் -நிதின் கட்காரி

Published On 2019-11-07 10:17 GMT   |   Update On 2019-11-07 10:17 GMT
மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதையும் ஆர்.எஸ்.எஸ் தலைவரையும் தொடர்புபடுத்த வேண்டாம் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 105 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. 

இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் சிவசேனா, ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்பதால் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள தேசியவாத காங்கிரசையும், 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரசையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை நேற்று சந்தித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் பாஜக-சிவசேனா கூட்டணி இடையே நிலவி வரும் குழப்பம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை தொடர்புபடுத்தக்கூடாது என மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று தெரிவித்தார்.

‘தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமையும். புதிய அரசு அமைப்பதில் உள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காண விரைவில் முடிவு எடுக்கப்படும். இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை (ஆட்சி அமைப்பது தொடர்பாக) தொடர்புபடுத்துவது பொருத்தமானதல்ல.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.’ என நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News