தமிழ்நாடு
பலியான ஜெகன்

திருமணமாகி 15 நாளில் விபத்தில் பலியான வங்கி ஊழியர்

Published On 2022-01-22 06:48 GMT   |   Update On 2022-01-22 06:48 GMT
ஓமலூர் அருகே திருமணமாகி 15 நாளில் வங்கி ஊழியர் விபத்தில் பலியானார்.
ஓமலூர்:

சேலம் அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் ஜெகன். இவர் மேட்டூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.

இந்த நிலையில் ஜெகன் சேலத்திலிருந்து மேட்டூருக்கு மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றார். ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் செல்லும் போது,முன்னால் சென்ற லாரியை இடது பக்க வழியாக முந்தி செல்ல முயன்றார். 

அப்போது பாலத்தின் சுவற்றில் மோதிய ஜெகன், லாரியின் அடியில் சிக்கினார். இதில் லாரியின் பின் சக்கரம் ஜெகன் மீது ஏறி இறங்கியது. இதனால், வயிறு பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். 

விபத்தை ஏற்படுத்திய லாரியை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, என்பவர் ஓட்டி வந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் சென்றதும், ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடியை தவிர்ப்பதற்காக  இந்த பாதையில் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.  

இந்த  விபத்து குறித்தும் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் வங்கி ஊழியர் விபத்தில் பலியான சம்பவம் சேலம் மற்றும் ஓமலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது
Tags:    

Similar News