செய்திகள்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்

Published On 2021-02-26 23:06 GMT   |   Update On 2021-02-26 23:06 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்மசங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விகள் எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மத்திய அரசுக்கு இதில் இருந்து வருவாய் கிடைக்கிறது என்ற உண்மையை மறைக்கமுடியாது. மாநிலங்களுக்கும் இதே நிலை தான். நுகர்வோர் மீது குறைந்த சுமை இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:

தர்மம் எனப்படும் மதத்தின் பெயரால் உங்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை தர்ம சங்கடம் என்று கூறி மத அரசியல் விளையாட வேண்டாம்.

பணவீக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் பொறுப்பாகும். மாறாக முடிவுகளை எடுக்கும்போது லாபத்தையும், நஷ்டத்தையும் கணக்கிடும் வர்த்தக அணுகுமுறையை அரசு பின்பற்றக் கூடாது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார். ஆனால் அவர் அதை எதிர்த்துப் போராடினார். நீங்கள் இதிலிருந்து தப்பித்து ஓடுகிறீர்கள்.

அண்டை நாடான இலங்கை, நேபாளத்தில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்று கூறி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால் நீங்கள் (நிர்மலா சீதாராமன்) பதவியில் தொடரக் கூடாது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News