செய்திகள்
ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published On 2019-11-12 11:16 GMT   |   Update On 2019-11-12 11:16 GMT
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் திறப்பு விழா, நவீன ஆவின் பாலகம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று திருவண்ணாமலை வந்தார். அவர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை.

அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த பேராதரவு தற்போதும் உள்ளது. மக்களிடத்திலே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. இது அ.தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து முதல் அமைச்சர் துணை முதல் அமைச்சர் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தோல்வி பயத்தில் பதட்டப்பட்டு மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

கட்சியினரிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என கூறுகிறார். இதன் மூலம் மக்களையும் மற்ற கட்சிகளையும் மிரட்டுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவரது கனவு பலிக்காது.

ஜெயலலிதாவிடம் அன்பு, கண்டிப்பு, நேர்மை ஆகியவை இருந்தது. அதனால்தான் உண்மை தொண்டர்களுக்கு உயர்வு இருந்தது. என்னை போன்ற அடிமட்ட தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார். சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பதவிக்கு வரமுடியும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் விவசாயிகள் படுகொலை இன்னும் பல சம்பவங்களை மறந்து விட்டார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கட்சியினர் பாலியல் தொல்லை குறித்து சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதை பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார் தி.மு.கவை மக்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் கிடைக்கிறது. தொழில் செய்ய அனுமதி, சாலை போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் கிடைக்கிறது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்க வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு பிரதிபலிக்கும்.

தமிழகத்தில் ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா, கால்நடை அபிவிருத்தி திட்டங்கள், மீன் அபிவிருத்தி திட்டம் அமைக்க குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரிய வெண்மை புரட்சி ஏற்படும்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு சிவசேனா நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. கொள்கை மட்டுமின்றி எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதன் மூலம் சிவசேனா தவறான முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News