செய்திகள்
கைதான கும்பலை படத்தில் காணலாம்.

சேலத்தில் சிவப்பு பாதரச மோசடியில் ஈடுபட முயன்ற 5 பேர் கும்பல் கைது

Published On 2020-01-09 11:50 GMT   |   Update On 2020-01-09 11:50 GMT
சேலத்தில் சிவப்பு பாதரச மோசடியில் ஈடுபட முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம்:

சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் பகுதியில் ஒரு கும்பல் தாங்கள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டால் பல லட்சம் கமி‌ஷன் தருவதாக கூறியதாக பெங்களூரு அத்திப்பள்ளியை சேர்ந்த குமார் (வயது 32 ) என்பவர் நேற்று சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் உதவி ஆய்வாளர் பாரதிராஜா மற்றும் போலீசார், கூட்டம் நடைபெறுவதாக இருந்த தனியார் காபி பாரை கண்காணித்து வந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 24), விழுப்புரம் மாவட்டம் அய்யந்தூரைச் சேர்ந்த ரமேஷ் (30), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவைச் சேர்ந்த கண்ணதாசன் (45), உசிலம்பட்டி, எம். ஜி. ஆர். நகரை சேர்ந்த தங்க பாண்டியன் மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம் தோப்புத்துறை பூசாரிக் கோட்டையை சேர்ந்த புருசோத்தமன் ஆகியோர் சிக்கினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சிவப்பு பாதரசம் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் அரிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருந்துகள் தயார் செய்யவும் பயன்படுவதாகவும் ஆன்லைனில் தெரிந்து கொண்டதாகவும் ஆனால் அது எளிதில் கிடைக்காது என்பதால் சேலத்தில் வைத்து உண்மையான வெள்ளை பாதரசத்தை சிவப்பு சாயத்தை கலந்து போலியாக சிவப்பு பாதரசத்தை தயார் செய்து அதை உண்மையான ரெட் மெர்குரி என்று சொல்லி வியாபாரிகளிடம் விற்றால் ஒரு கிலோ சிவப்பு பாதரசம் 3 மில்லியன் டாலர் விலை போகும் என்றும் ஒரு மில்லி சிவப்பு பாதரசத்தை 3 கோடிக்கு விற்பனை செய்யலாம் என்றும் பேசிக்கொண்டும் அதற்காக யார் வியாபாரிகளை அழைத்து வருவது? என்றும் அவர்களை ஏமாற்றி போலி சிவப்பு பாதரசத்தை விற்றுவிடலாம் என்றும் பேசிக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது:-

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்ததாக குறுஞ்செய்திகள் அனுப்பி பெருந்தொகையை ஏமாற்றுவது, ஆன்லைன் டிரேடிங் என கூறி பெருந்தொகையை முதலீடாக பெறுதல், ஆன்லைனில் கிரெடிட், டெபிட் கார்டு எண்களை பெற்று மோசடி செய்தல், லோன் வாங்கி தருவதாக மோசடி செய்தல், ஆன்லைன் லாட்டரி மோசடி, இருடியம் மோசடி , மண்ணுளி பாம்பு மோசடி போன்ற மோசடிகளை தொடர்ந்து பொதுமக்களை ரெட் மெர்குரி விற்பனை என நூதன மோசடி செய்ய திட்டம் தீட்டிய மேற்படி கும்பலை பிடித்ததன் மூலம் பெரிய நூதன மோசடி தடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ரெட் மெர்குரி வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக எந்த தகவலும் இல்லை. அதே போல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படாத மேற்படி தனிமத்தை தயாரிப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் வருங்காலங்களில் மோசடி நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே மேற்படி மோசடி கும்பலிடம் இருந்து விலகி கவனமாக இருக்கும்படி பொதுமக்களை சேலம் மாநகர காவல் துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Tags:    

Similar News