ஆன்மிகம்
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் கல்கருட பகவான், வஞ்சுளவல்லி தாயாருடன், சீனிவாசப்பெருமாள்.

நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்

Published On 2021-04-06 08:49 GMT   |   Update On 2021-04-06 08:49 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியே விமானங்கள் உண்டு.

மொத்தம் ஏழு விமானங்களும், சிறிய மற்றும் பெரிதாக நான்கு கோபுரங்களும் உள்ளன. கோவிலின் ராஜகோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டதாய் 76 அடி உயரம் கொண்டது. இக்கோவிலில் மொத்தம் ஐந்து தீர்த்த குளங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் வலப்புறம் திருமங்கை ஆழ்வார் சன்னதி உள்ளது.

கோவிலின் உள்ளே ஆழ்வார் உடையவர் கூரத்தாழ்வார், மணவாள மாமுனிவர், ஸ்ரீதேசிகன், அனுமார் சேனை முதலியார் தாமோதர பிள்ளையார், பொன்னியம்மன், யோக நரசிம்மர், கருடன் சன்னதிகளும், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், சவுரிராஜன், அரங்கநாதர்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சன்னதிகளும் உள்ளன. மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. ராஜகோபுர வாசலில் நின்று நோக்கினாலும் கருவறையிலும் உள்ள எம்பெருமாள் ஒரு மலைமேல் எழுந்தருளி இருப்பதாக மணிமாடக் கோவில் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த வகையில் தரிசனம் தருவார்.

இந்த கோவிலில் மூலவர் சீனிவாச பெருமாள் வலது பக்கம் தனி நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் என்ற திருப்பெயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வஞ்சுளசெடியின் அடியில் இவரை மேதாவி முனிவர் கண்டெடுத்தபடியால் வஞ்சுளவல்லி என்ற திருப்பெயரால் இவரை அழைக்கிறார்கள். கருவரை நான்குபுறமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைப்பு சிற்ப சிலையாக காணப்படுகின்றனர்.

கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.

வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.

சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் முன்பு மேதாவி என்ற மாமுனிவர், வாவிதடஞ்சூழ் மணிமுத்தாற்றின் தென் கரையில் அமர்ந்து தவம் செய்தார் முனிவருக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசன் மருமகனாக வேண்டும் என்ற ஆசை.. ஒருநாள் முனிவர் மணிமுத்தாறில் நீராடுகையில் மற்றொரு பக்கம் நரசிங்கப்பெருமாளுடன் கூடிய ஒரு சக்கரபாணி சுவாமி அவர் கையில் கிடைத்ததால் முனிவர் வியந்து நின்றார். அப்போது முனிவரே... வியந்து நிற்க வேண்டாம். தங்கள் கை புகுந்த எம்பெருமான் சக்கரபாணி நரசிங்கப் பெருமாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் நினைத்த எண்ணம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கு எழுந்தது. அசரீரியின் சொற்கேட்ட முனிவர் வியந்து தமது எண்ணம் கை கூட விரும்பி மகிழ்ச்சியுடன் இக்கோவிலின் உள்ளே அந்த சக்கரபாணி நரசிம்ம பெருமாளை பிரதிஷ்டை செய்து முறைப்படி வழிபட்டு வந்தார்.

வஞ்சி மரத்தின் அடியில் ஒரு ஒளிப் பிழம்பான அழகி இவளை தவம்செய்து அடைந்தது எனலாம்படியான தெய்வத்திருமகள் ஒருவர் தோழிகளுடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார். முனிவர் அந்த தெய்வங்களை கண்டதும் தனது தவம் பலித்தது என்று மகிழ்ந்தார். அச்சிறுமியின் அருகே சென்று குழந்தாய், நீ யாரம்மா? உன்னைப்பெற்ற பெருந்தவத்தினர் யார்? உனது திருப்பெயர் என்ன? நீ இருக்கும் இடம் யாது? என வினவினார். அதற்கு அந்த குழந்தை முனிவரை நோக்கி, என் தந்தையையும், தாயையும் என் பெயரையும், ஊரையும் பிற ஒன்றையும் யானறியேன். எல்லாம் எனக்கு தாங்களே என்று எண்ணியே இத்தலம் அடைந்தேன். என்னை மகளாக ஏற்று அருள் புரிவீர் என வேண்டி நின்றாள்.

இதனையடுத்து அந்த சிறுமியை ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்று முனிவர் வளர்த்து வந்தார். வஞ்சி மரத்தடியில் தோன்றிய திருமகளை வஞ்சுளவல்லி என பெயரிட்டு அழைத்து வந்தார். இறைவன் மேதாவி முனிவரை நோக்கி முனிவரே... தங்களது மகளை எனக்கு திருமணம் செய்வித்து மாமனாராக வேண்டும் என்றார். இ‌‌ஷ்டசித்தி ஏற்பட்டதை நினைத்து பெரிதும் மகிழ்ந்தார். எம்பெருமான் தன் நிலையையும் எளிமையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து முனிவரும் அப்பெருமானைப் போற்றினார். எந்தாய் அடியேன் நின்பால் சில வரங்கள் பெற வேண்டி நிற்கிறேன். அருள்புரிய வேண்டும்.

அடியேனுக்கு இன்று திருவஞ்சுளவள்ளியுடன் கூடி தரிசனம் தந்தது போல் இத்தலத்தில் இனியும் பின்னர் யாவரும் தேவரீரையும் வஞ்சுளவல்லியையும் ஏக சிம்மாசனத்தில் சேவித்து இம்மை மறுமைப் பயனை பெற அவர்களுக்கும் தரிசனம் தந்தருள வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மை சுதந்திரமும் தருவதுடன் அவர் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தேவரீரை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும். இந்த வரங்களை தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதன்படி இறைவன், முனிவர் கேட்ட வரங்களை அருளினார்.

கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்

கோவில் பட்டாச்சாரியார் கோபி கூறுகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் உடையவர் திருநட்சத்திர விழா, வைகாசியில் வசந்த திருவிழா, ஆடி மாதத்தில் சுதர்சன ஹோமம், பவித்ரோட்சவம், ஆவணி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, ஸ்ரீ வேங்கடமுடையான் லட்சார்ச்சனை, தேசிகர் உற்சவம், ஐப்பசி மாதத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை சொக்கப்பனை மற்றும் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு.

மார்கழி மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், சுவாதி நட்சத்திர நாளில் கருட பகவானுக்கு லட்சார்ச்சனை, கணு உற்சவம் அன்று தீர்த்தவாரி, மாசி மாதத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவிழா, மாதந்தோறும் சுவாதி அன்று சுவாதி தீபம் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ப.ரமேஷ், செயல் அலுவலர் ஆ. ஜீவானந்தம் மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News