செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி

வெட்டிக்கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

Published On 2020-09-17 07:03 GMT   |   Update On 2020-09-17 07:03 GMT
கெலமங்கலம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). தனியார் பள்ளி பஸ் டிரைவரான இவர் கெலமங்கலம் ஒன்றிய பா.ஜ.க. இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரங்கநாதன் தனது மகன் பிறந்த நாளையொட்டி குந்துமாரனப்பள்ளியில் உள்ள பேக்கரி கடைக்கு கேக் வாங்க சென்றார்.

அப்போது குந்துமாரனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் கெலமங்கலத்தை சேர்ந்த சதிஷ் என்பவருடன் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதற்கு, போத்தசந்திரம் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே ரங்கநாதன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். வடமாநில தொழிலாளிக்கு ஆதரவாக ரங்கநாதன் பேசியதால் ஆத்திரமடைந்த போத்தசந்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி கீதா (25) மற்றும் அண்ணன் மஞ்சுநாத் (37) ஆகியோரையும் அவர்கள் தாக்கியதும் தெரியவந்தது.

மேலும் போத்தசந்திரத்தை சேர்ந்த தமிழரசன் (21), அம்ரீஷ் (20), ராஜேஷ் (23), சின்னராஜ் (22), தேவகுமார் (25), ராமு (26), லட்சுமணன் (24), பிரகாஷ் (26), கூட்டூரை சேர்ந்த கிரி (26) ஆகிய 9 பேர் ரங்கநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதில் பிரகாஷ் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி குந்துமாரனப்பள்ளியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதேபோல் நேற்று ஓசூரில் பா.ஜ.க.வினர் மற்றும் ரங்கநாதனின் உறவினர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ஸ்வேதா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசலு மற்றும் கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கெலமங்கலம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
Tags:    

Similar News