உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கன்னிவாடி சந்தையில் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை குறைந்தது

Published On 2022-04-17 06:43 GMT   |   Update On 2022-04-17 06:43 GMT
கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
 
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. 

இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. 

இதனால் விவசாயிகள் ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் கவலையுடன் ஆடுகளை திருப்பி கொண்டு வரும் நிலை ஏற்பட்டது.

இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரமும் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. 

இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதாலும், வியாபாரிகளின் வரத்து குறைந்ததாலும் ஆடுகளின் விலை உயரவில்லை என்று வியாபாரிகள் கூறினர். இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். 

அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ஆடு ரூ.600 என்ற அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
Tags:    

Similar News