செய்திகள்
மதுபானம்

டாஸ்மாக் மது பார்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை- 75 சதவீதம் வருவாய் இழப்பு

Published On 2021-01-05 09:05 GMT   |   Update On 2021-01-05 09:05 GMT
டாஸ்மாக் பார்களில் மதுப்பிரியர்கள் அதிகளவு வரவில்லை. இதனால் 75 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 8 மாதமாக டாஸ்மாக் மதுபார்கள் மூடப்பட்டு இருந்தன. பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் அனைத்து பார்களும் திறக்கப்பட்டன.

பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் 3,200 பார்கள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகள் வழக்கமான நேரத்திற்கு செயல்பட்டாலும் விற்பனை மந்தமாக உள்ளது.

புத்தாண்டில் பொதுவாக விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் இந்த வருடம் மது விற்பனை குறைந்து நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.

சென்னை உள்பட நகரங்களில் உள்ள பார்கள் கூட காலியாக கிடக்கின்றன. கொரோனாவுக்கு முன்பு வரை பிசியாக செயல்பட்ட பார்கள் இப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பார்கள் செயல்பட்டு வருகின்றன. திறந்த வெளி பார்களில்தான் ஒரு சிலர் இருந்து மது அருந்துகிறார்கள். ஏ.சி. வசதி கொண்ட பார்களுக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்களில் கூட்டம் குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

மது பார்கள் திடீரென திறக்கப்பட்டதால் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை. ஒரு சில பார்களில் மின்சார வசதி இல்லை. மதுபானங்களை குளிரூட்டும் பெட்டிகள் பழுதடைந்துள்ளன. மேலும் கடந்த 8 மாதமாக மது பிரியர்கள் திறந்த வெளி இடங்களில் மது அருந்தி பழகி விட்டனர். அதனால் தற்போதும் அந்த மனநிலையிலேயே உள்ளனர். அதனால் பார்களுக்கு வர ஆர்வம் காட்டவில்லை.

இது தவிர வேலை வாய்ப்பு முழுமையாக இல்லாததால் போதிய வருவாய் இல்லாமல் பார்களுக்கு வரவில்லை. மதுக்கடைகளில் விற்பனை அதிகம் நடந்த போதும் கூட பார்களுக்கு வரவில்லை. மதுபாட்டில்களை வாங்கி கொண்டு வெளியில் சென்று விடுகின்றனர்.

இந்த நிலை படிப்படியாகத்தான் மாறும். திறந்த வெளி இடங்களில் மது அருந்துவதை போலீசார் தடுத்தால்தான் பார்களுக்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினர்.

இதுகுறித்து பார் உரிமையாளர்கள் கூறுகையில், அரசு பார்களை திறக்க அனுமதி வழங்கிய போதும் மதுப்பிரியர்கள் அதிகளவு வரவில்லை. இதனால் 75 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு மாதம் ஏலத்தொகை செலுத்த வேண்டும். அதனை பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால் நிர்வாகம் குறைக்கவில்லை. கட்டிட வாடகை, ஏலத்தொகை, தொழிலாளர்கள் சம்பளம் போன்றவற்றை சமாளிப்பது பெரும் சிரமம் என்றனர்.

Tags:    

Similar News