செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு

Published On 2019-10-06 08:41 GMT   |   Update On 2019-10-06 08:41 GMT
பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடந்த 28ந் தேதி நள்ளிரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் தற்போது 15 டி.எம்.சி. தண்ணீர் உளள்து. அங்கிருந்து வினாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 700 கனஅடி வீதமும், பூண்டி ஏரிக்கு 596 கனஅடி வீதமும் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து, கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து தற்போது சென்னை குடிநீர் வாரியத்துக்கு இன்று காலை பேபி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு 20 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது. இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.85 அடி பதிவானது. 824 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News