உள்ளூர் செய்திகள்
கைது

கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-05-07 07:37 GMT   |   Update On 2022-05-07 07:37 GMT
கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 107 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:

சென்னை எண்ணூரை சேர்ந்த சுபாஷ், வினோத் ஆகியோர் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த குற்றத்திற்காகவும், ஆள் மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்த குற்றத்திற்காக கேரளாவை சேர்ந்த சமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், ராயப்பேட்டையை சேர்ந்த ஹரிஷ் என்கிற சின்ன ஹரிஷ் ஆகியோர் கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்டனர். இதில் விக்னேஷ் மீது ஏற்கனவே கொள்ளை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன.

திருவல்லிக்கேணியை சேர்ந்த சகோதரர்கள் அழகுராஜா, பாலாஜி ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் கொளத்தூரை சேர்ந்த விக்னேஷ், பிராட்வேயை சேர்ந்த வசந்த குமார், வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ்குமார், கணேசன், இன்பம், அம்பத்தூரை சேர்ந்த குமரேசன், பாடியை சேர்ந்த புருட்டி என்கிற கார்த்திக் ஆகியோர் கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள், நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள், வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகள் என மொத்தம் 14 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 107 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News