செய்திகள்
மும்பை சத்தீஷ்கர் போட்டி மழையால் ரத்து

விஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்

Published On 2019-10-21 13:18 GMT   |   Update On 2019-10-21 13:18 GMT
விஜய் ஹசாரே டிராபி காலிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், லீக் ஆட்டம் புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு, சத்தீஷ்கர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆளுரில் நடைபெற்றன.

ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174  ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் தமிழ்நாடு அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது.

பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாப் அணியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்ததால் அதனடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. மழை குறுக்கிடும்போது பஞ்சாப் அணிக்கு 160 பந்தில் 143 ரன்கள்தான் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் இருந்தன.

போட்டி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் பஞ்சாப் அணி வென்றிருக்கும். மழையால் அதிர்ஷ்டம் இல்லாமல் சோகத்துடன் பஞ்சாப் அணி வெளியேறியது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மும்பை - சத்தீஷ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சத்தீஷ்கர் அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

இதனால் சத்தீஷ்கர் அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது. மும்பை அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி அதிரடியாக விளையாடி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் நடத்த முடியாததால், போட்டி கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டம் புள்ளிகளை கணக்கிட்டு சத்தீஷ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியில் மழை எமனாக புகுந்ததால் மும்பை அணி தாங்க முடியாத சோகத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது.
Tags:    

Similar News