ஆன்மிகம்
போலீசார் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை

Published On 2021-10-20 04:55 GMT   |   Update On 2021-10-20 04:55 GMT
இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.56 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் சிலர் நேற்று பகலில் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்று பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News