செய்திகள்
நேபாளம் நடாளுமன்றம் (கோப்புப்படம்)

நாடாளுமன்ற கலைப்பு செல்லாது: 13 நாட்களுக்குள் சபையை கூட்டுக- நேபாளம் உச்சநீதிமன்றம் அதிரடி

Published On 2021-02-23 13:48 GMT   |   Update On 2021-02-23 13:48 GMT
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது, 13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு பதவி வழங்கி சபையை கூட்ட வேண்டும் என நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் காபந்து அரசு செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பார்ன அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் ‘‘நாடாளுமன்ற கலைப்பு செல்லாது. கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற கலைப்பிற்குப்பின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாது. நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கி இன்னும் 13 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் ’’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார்.

என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அதிகார மோதல் நீடித்து வந்தது. மோதலின் முடிவு ஆட்சிக் கலைப்பில் முடிந்தது.

பிரதமர் ஒளி தலைமையில் டிசம்பர் 20-ந்தேதி காலை அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப்பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, பிரதமர் ஒளி பரிந்துரை செய்தார். பரிந்துரை தொடர்பாக அதிபரையும், பிரதமர் சர்மா ஒளி சந்தித்துப் பேசினார். அதன்பின் அதிபர் பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதிபர் தேவி பண்டாரி ‘‘நேபாள நடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம்தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும்'' என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை பிரதமர் சர்மா ஒளி கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார்.

ஆனால், பிரதமர் ஒளியின் இந்தச் செயலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. இதனால், என்சிபி கட்சியின் கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டாவுக்கும், பிரதமர் ஒளிக்கும் இடையே கூட்டத்தில் நேரடியாக மோதல் வெடித்தது.

இதையடுத்து, சிலர் அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசண்டா மீது பிரதமர் ஒளி வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின் இருவருக்கும் இடையே மோதல் தீவிரமானது. இந்த மோதல் ஆட்சிக் கலைப்பில் முடிந்தது.
Tags:    

Similar News