ஆன்மிகம்
விக்னேஷ்வர் திருக்கோவில்

தடைகளை அகற்றும் விக்னேஷ்வர் திருக்கோவில்- மகாராஷ்டிரா

Published On 2020-08-18 02:21 GMT   |   Update On 2020-08-18 02:21 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஜார் என்ற இடத்தில் இருக்கும் விக்னேஷ்வர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஜார் என்ற இடத்தில் இருக்கும் விக்னேஷ்வர் திருக்கோவில். இந்த திருத்தலம் பூனாவில் இருந்து நாராயண்காவ் ஜுன்னூர் செல்லும் வழியில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் தல வரலாற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

முன் ஒரு காலத்தில் ஹேமாவதி என்னும் நகரை, அபிநந்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பதவி, செல்வம் ஆகிய எல்லாவற்றிலும் அளவற்ற ஆசை இருந்தது. தான் நினைத்த பதவிகளை எல்லாம் வகித்து வந்தான். இதையடுத்து அவனுக்கு, தேவலோகத்தில் உள்ள இந்திரனின் பதவியை அடைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதற்காக பிரம்மதேவனை நினைத்து பெரிய யாகம் ஒன்றை செய்யத் தொடங்கினான். இதுபற்றியச் செய்தியை, மூவுலகங்களுக்கும் சென்றுவரும் நாரத முனிவர், இந்திரனிடம் தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த இந்திரன், காலன் என்பவனை பூலோகத்திற்கு அனுப்பி, அபிநந்தன் செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டான். அதன்படியே பூலோகம் வந்த காலன், அபிநந்தனின் யாகத்தை கலைத்தான். அதோடு பூலோகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வைதீகச் செயல்கள் அனைத்தையும் அழித்துவிட்டான். இதனால் அந்த காலன், ‘விக்னாசுரர்’ என்ற அசுரனாக உருவெடுத்தான். அவனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் துன்பத்தில் உழன்றன. அந்த அசுரனைக் கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைவிரித்தாடியது.

இதனால் தேவர்கள் அனைவரும் கஜானனன் எனப்படும் விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து தேவர்களுக்கு, மக்களுக்கும் துன்பங்களை நீக்க விநாயகப்பெருமான் முடிவு செய்தார். தேவர்களையும், உலக உயிர்களையும் காப்பதாக வாக்களித்த விநாயகர், பராசர முனிவருக்கு பிள்ளையாகப் பிறந்தார். பின்னர் விக்னாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகரின் ஆற்றலைக் கண்ட பயந்து நடுங்கிய விக்னாசுரன், அவரிடம் அடைக்கலம் அடைந்ததோடு, தான் செய்த பிழையை பொறுத்து அருளும்படி மன்னிப்பு வேண்டினான்.

உடனே விநாயகப்பெருமான், “என்னை வழிபடுபவர்கள், என்னுடைய பக்தர்கள் யாரையும் நீ ஒன்றும் செய்யக்கூடாது” என்று கட்டளையிட்டு, விக்னாசுரனுக்கு மன்னிப்பு வழங்கினார். அப்போது விக்னாசுரன், தன்னுடைய பெயரையும் விநாயகரின் பெயருக்கு முன்பால் சூடிக்கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அதன்படியே அவனது பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் விநாயகர் சூடிக்கொண்டார். இதன் காரணமாக, இத்தல விநாயகப்பெருமான், ‘விக்னேஷ்வர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் உடனடியாக சித்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இந்த விநாயகர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலை அடைந்ததும் உள்ளே சபா மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்தில் ஒரு அழகான, கம்பீரமான விக்னேஷ்வரின் மூர்த்தி ஒன்று உள்ளது. இந்த மூர்த்தியின் தும்பிக்கை, இடதுபக்கம் திரும்பியது போல் காட்சி தருகிறது. இந்த விநாயகரின் இரண்டு கண்களிலும் மாணிக்கம் வைக்கப்பட்டுள்ளது. தலையில் வைரமும், வயிற்றில் ரத்தினமும் பதிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் இரண்டு பக்கத்திலும் பித்தளையால் செய்யப்பட்ட சித்தி- புத்தி தேவியரின் திருமேனிகள் காட்சி அளிக்கின்றன. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கிக்கொள்வதற்காக, இங்கு தர்மசாலா எனப்படும் இலவச தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

ஆதிசங்கரனின் ஷண்மத அமைப்பில், மகாராஷ்டிரத்திற்கு ‘காண்பத்யம்’ சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘கவுமாரம்’ என்று சொல்லப்பட்ட முருகன் எப்படியோ அப்படித்தான், மகாராஷ்டிராவில் கணபதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவருக்கான நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அனைவரும் தரிசிக்க வேண்டிய தலங்களில் இதுவும் ஒன்று.
Tags:    

Similar News