செய்திகள்
மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா

காணும் பொங்கல் மட்டுமல்ல: 3 நாட்கள் கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை

Published On 2021-01-12 11:03 GMT   |   Update On 2021-01-12 11:03 GMT
காணும் பொங்கல் மட்டுமல்ல, ஜனவரி 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுபோல காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது. காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா நோய்  தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் காணும் பொங்கலன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று அதிகளவில் ஏற்படும்.

ஆதலால் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் என்பதால் வண்டலூர் உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட கடற்கரையில் 15,16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’’ எனற அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News