செய்திகள்
தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்து மதுபாட்டில் வாங்கியாச்சு என்ற ஆர்வத்துடன் மதுபிரியர்

டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி மதுவாங்கிய மதுபிரியர்கள்

Published On 2021-10-05 04:38 GMT   |   Update On 2021-10-05 04:38 GMT
குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டி மதுபிரியர்கள் மதுபாட்டில் வாங்கி சென்றனர். இந்த புதிய நடைமுறைக்கு மதுபிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பணியாளா்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதே சமயத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 60 சதவீதம் பேர் வரை தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் சிலர் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் புதிய நடவடிக்கையாக டாஸ்மாக் மதுக்கடைக்கு மதுபானம் வாங்க வரும் மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுபானங்களை வழங்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 113 மதுக்கடைகளிலும் நேற்று மதுபானம் வாங்க வந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஊழியர்கள் கேட்டனர்.

அப்போது சான்றிதழ் காட்டியவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்கப்பட்டது. பெரும்பாலான மது பிரியர்கள் செல்போன் மூலம் சான்றிதழை காண்பித்து மதுபானங்களை வாங்கி சென்றனர். அதே சமயம் தடுப்பூசி செலுத்தாத நிறைய பேர் மதுபானம் வாங்க வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மதுக்கடை ஊழியர்கள் மதுபாட்டில் வழங்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதிலும் சிலர் சாமர்த்தியமாக தடுப்பூசி செலுத்தியவர்களிடம் பணத்தை கொடுத்து மதுபானங்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

இந்த நடைமுறை குறித்து மதுபிரியர்கள் கூறுகையில், "தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது கிடையாது என்ற விதி எங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் நாங்கள் சிரமப்பட்டு மதுவை வாங்கி சென்றோம். இந்த விதிமுறையால் அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படும். எனவே இந்த நடைமுறையை எதிர்க்கிறோம். தடுப்பூசி செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும்" என தெரிவித்தனர்.
Tags:    

Similar News