ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருப்பதியில் நடத்தியது போல் பத்மாவதி தாயார் கோவிலிலும் பிரம்மோற்சவ விழா தனிமையில் நடத்தப்படுகிறது

Published On 2020-11-03 06:23 GMT   |   Update On 2020-11-03 06:23 GMT
திருப்பதியில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தனிமையில் நடத்தப்பட்டது போல் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழாவும் கோவிலுக்குள் ஏகாந்தமாக பக்தர்கள் இன்றி தனிமையில் நடத்தப்பட உள்ளது.
திருப்பதி :

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடத்தப்படும்.

பத்மாவதி தாயார் பத்மசரோவரம் திருக்குளத்தில் தோன்றிய கார்த்திகை மாதம் பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று நிறைவடையும் வகையில் இந்த பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

11-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இரவில் சின்னசேஷம் வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளுகிறார். 12-ந்தேதி காலை பெரியசேஷ வாகன சேவை, இரவில் அன்னப்பறவை வாகனத்திலும், 13-ந்தேதி காலை முத்துப்பந்தல் சேவை, இரவு சிம்ம வாகனத்தில் தரிசனம், 14-ந்தேதி காலை கல்பவிருட்சம் சேவையும், இரவில் அனுமந்தம் வாகனத்திலும், 15-ந்தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவில் யானை வாகனத்திலும், 16-ந்தேதி சர்வபூபால வாகனத்திலும், இரவில் கருட சேவையும், 17-ந்தேதி காலை சூரியபிரபை சேவையிலும், இரவில் சந்திரபிரபை நடக்கிறது. 18-ந்தேதி காலை சர்வபூபால வாகன சேவை, இரவில் குதிரை வாகனத்திலும், 19-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தமும், இரவில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10-ந்தேதி காலை லட்ச குங்குமார்ச்சனையும், மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

திருப்பதியில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தனிமையில் நடத்தப்பட்டது போல் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழாவும் கோவிலுக்குள் ஏகாந்தமாக பக்தர்கள் இன்றி தனிமையில் நடத்தப்பட உள்ளது.

தங்க ரதம், திருத்தேர் ஆகியவற்றுக்கு மாற்றாக சர்வ பூபால வாகன சேவை நடத்தப்படும். மேலும் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் தீர்த்தவாரியும் கோவிலுக்குள் வாகன மண்டபத்தில் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News