செய்திகள்
சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேறியது -பாஜக வெளிநடப்பு

Published On 2021-09-13 09:31 GMT   |   Update On 2021-09-13 10:47 GMT
நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மீதான விவாதத்தின்போது சட்டசபையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது என்றும், கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்திருப்பதாகவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது. சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து மாணவர்களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மசோதா மீதான விவாதத்தின்போது அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். நீட் தேர்வால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியலையும் முன்னுதாரணம் காட்டி இனி நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள். பாஜக இந்த மசோதாவை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. 

இதைத்தொடர்ந்து மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேறியது. 
Tags:    

Similar News