செய்திகள்
எஸ்.எம். கணேஷ்

நலிந்து வரும் ஆர்மோனியம் செய்யும் தொழில்

Published On 2021-09-09 06:20 GMT   |   Update On 2021-09-09 06:20 GMT
ஆரம்ப காலங்களில் இசைக் கலைஞர்கள், கூத்து பட்டறை, நாடகக் குழுக்கள் மத்தியில் ஆர்மோனியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
நாகர்கோவில்:

இசைக்கு மயங்காத உயிர்கள் இந்த உலகத்திலேயே இல்லைனு சொல்லலாம். ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் கூட ஏதோ ஒரு ரூபத்தில இசை பயணப்பட்டுக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இருக்கிற இந்த பரபரப்பான உலகத்தில பலபேரின் நிம்மதிக்கு காரணமா இருக்கிறது இசை தாங்க. சரிகமபதநிங்கிற இந்த ஏழு ஸ்வரங்களையும் இசையா மீட்கிறதுல ஆர்மோனியத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பல சிறப்புக்கள் வாய்ந்த ஆர்மோனியத்தை ஒரு குடும்பம் பாரம்பரியமா செஞ்சிட்டு வராங்க. அதுல இப்ப மூணாவது தலைமுறையா இருக்கிற எஸ்.எம். கணேஷ் ஆர்மோனியத்தைப் பற்றி பகிர்ந்திக்கிறார்.

என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மேட்டுக்கடை தக்கலை தான். நாங்க ஆர்மோனியம் செய்யிற தொழிலை கிட்டத்தட்ட நாலு தலைமுறையா செஞ்சிட்டு வரோம். எங்க கடை பேரு ஸ்ரீ முருகன் ஆர்மோனியம் மற்றும் ஆர்கன் தயாரித்தல். எந்த மிஷின் உதவியும் இல்லாம முழுக்க முழுக்க எங்க உழைப்ப மூலதனமா போட்டு ஆர்மோனியத்தை செஞ்சிட்டு வந்தோம், இப்ப சில இயந்திரங்களை பயன்படுத்துறோம்.

நாங்க செய்யிற இந்த ஆர்மோனியம் 40, 50 வருசம் வரை கூட உழைக்கிறது. அதனாலேயே சுத்துவட்டாரத்துல எங்க ஆர்மோனியத்துக்கு தனி மவுசு உண்டு. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா! ஆர்மோனியம் நம்ம நாட்டோட இசைக் கருவியே இல்ல. 1842ல ஒரு அலெக்சாண்ட்ரோ ங்கிற ஒரு பிரெஞ்சு நாட்ட சேர்ந்தவர் கண்டுபிடிச்சார். பிரெஞ்சு காரங்க இந்தியா வரும்போது, எடுத்திட்டு வந்தாங்க. அப்படியே நம்ம இசையோடு ஒத்துப் போய் நமக்குள்ள இணைஞ்சிடிச்சு.

ஆரம்ப காலங்கள்ல இசைக் கலைஞர்கள், கூத்து பட்டறை, நாடகக் குழுக்கள் வெச்சிருக்கவங்க மத்தியில ஆர்மோனியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு. ஒரு சின்ன ஆர்மோனியம் பெட்டி  6,000 ரூபாய்ல இருந்து விற்கிறோம். ஆர்மோனியத்தைப் பொறுத்த வரை ஆக்சஸ் கணக்கு வெச்சு தான் விலை நிர்ணயம் பண்றோம்.

என் தாத்தா, அப்பா, நான் இப்ப அடுத்த தலைமுறையா என் மகன் முத்துராஜாவும் இந்த தொழில்ல இறங்கியிருக்கார். ஒவ்வொரு ஆர்மோனியத்தையும் நாங்க பார்த்து பார்த்து செய்யுறோம். ஆனாலும், எலக்ட்ரானிக் கீபோர்டு வந்ததாலயும், நாடகங்கள் குறைச்சிட்டதாலயும் நாங்க செய்யிற ஆர்மோனியத்துக்கு மவுசு குறைஞ்சிடிச்சி.

கையால செய்யுற எங்க ஆர்மோனியத்துக்கும் இன்னும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்யிறாங்க. துல்லியமான, தெளிவான சப்தங்களை இதில் வாசிக்கும் போது கிடைக்கிறதா வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. நாங்க ஆர்மோனியம் செய்யிறது மட்டுமில்லாம வீணை, தம்புரா, அக்கார்டின், ரானோ என வேறு இசைக்கருவிகளையும் பழுது பார்க்கனும்னா கூட நாங்க சரி செய்து கொடுப்போம்.


இங்கிருந்து வெளிநாட்டுக்கு போறவங்க எங்க ஆர்மோனியத்த விரும்பி வாங்கிட்டு போவாங்க. ஆர்மோனியம் செய்யும் தொழில்ல இருக்கிறதால ஓரளவு எங்களுக்கு இசை ஞானமும் இருக்கு. அது இருந்தால் மட்டும் தான் ஆர்மோனியத்த டியூன் பண்ண முடியும். இப்ப எனக்கு 70 வயசு ஆகுது, எனக்கு பிறகு என் மகன் இந்த தொழில்ல இருப்பார்.

இதே துறையில இருந்திட்டதால வேற வேலை எதுவும் கத்துக்கல. இப்ப வயசும் ஆயிடிச்சு, மத்த தொழிலுக்கு போகவும் விருப்பம் இல்ல. இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு, பழைய மாதிரி ஆர்மோனியம் இசை பிரியர்கள் மத்தியில பிரபலமாகும், விரும்பி வாங்குவாங்கனு நம்புறேன்.  எங்களுக்கு அரசு கிட்ட இருந்து எந்த ஊக்கத்தொகையும் கிடைக்கல. அரசு கிட்ட கோரிக்கை வெச்சிருக்கேன், கிடைக்கும்னு நம்புறேன்.

புதிய தொழில்நுட்பங்கள் வளர வளர நம் மரபு மற்றும் பாரம்பரியங்கள் அழிவதை தடுக்க முடியாது தான், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றாற் போல், அடுத்த தலைமுறையினர் அப்டேட் ஆக வேண்டிய கட்டாய சூழல். இதுக்கு அரசும் தன்னாலான உதவிகளை நலிவடையும் கலைகளுக்கு செய்யனும். இசைக் கருவி செய்யும் கலைஞர்களின் வாழ்வில் சந்தோஷ கானம் கேட்கனும் என்றார்.
Tags:    

Similar News