செய்திகள்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் திட்டம்

Published On 2018-09-05 05:53 GMT   |   Update On 2018-09-05 05:53 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. #pertolprice #petrolexport #Congress

புதுடெல்லி:

பெட்ரோல்- டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன.

விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணை விலையில் பெரிய மாற்றம் இல்லாத போதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு இந்திய பண மதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது சம்பந்தமாக நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தை காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் ஆகியோர் நடத்துகிறார்கள். இதில் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

மேலும் அனைத்து மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்தும் திட்டம் காங்கிரசிடம் உள்ளது.

இதற்காக தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசித்து வருகிறார்கள். நாளை இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் கூறும் போது, தற்போதைய கச்சா எண்ணெய் விலையை வைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 39 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.35.50-க்கும் விற்க முடியும். ஆனால், 80 ரூபாயை தாண்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் லாப தொகை இருப்பு உள்ளது. ஆனாலும், விலையை உயர்த்துகிறார்கள் என்றனர்.


காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ்திவாரி கூறும் போது, 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 138 டாலராக உயர்ந்து இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த நாங்கள் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் உயர்த்தினோம்.

ஆனால், அதை பொருளாதார பயங்கரவாதம் என்று பாரதய ஜனதா கட்சி விமர்சித்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலை யிலும் 80 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

அப்படியானால் பாரதிய ஜனதா கட்சிதான் மக்கள் மீது பொருளாதார பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி பெட்ரோல்- டீசல் விலையை 2 மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறது. இந்த விலையை குறைக்காவிட்டால் நாங்கள் பெரும் போராட்டத்தை நடத்துவோம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடுவதற்கு இன்னும் 16 ரூபாய்தான் பாக்கி உள்ளது. இன்னும் 7 மாதம் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்க போகிறது. அதற்குள் 100 ரூபாயை எட்டி விடுவார்கள்.

இந்த விலை உயர்வால் விவசாயிகள், சிறு வணிகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார். #pertolprice #petrolexport #Congress

Tags:    

Similar News