செய்திகள்
அமைச்சர் துரைமுருகன்

தி.மு.க.வில் உள்ளடி வேலை... தபால் ஓட்டில்தான் வெற்றி பெற்றேன் - துரைமுருகன் பேச்சு

Published On 2021-07-26 08:10 GMT   |   Update On 2021-07-26 10:49 GMT
உள்ளாட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர்:

காட்பாடி சட்டசபை தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் பொன்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

நான் இந்த தொகுதியில் 71-ம் ஆண்டு முதல் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக மேல்பாடி, பொன்னை பிர்கா தி.மு.கவின் கோட்டை என்பேன்.

ஆனால் இந்தமுறை கிட்டதட்ட 6 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி விட்டோம். காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள்.

ஆனால் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.

மறப்போம்.. மன்னிப்போம்.. என அண்ணாதுரை சொன்னதை நினைத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். தி.மு.க. அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கிவிடுவேன்.



காட்பாடி யூனியன் என்னை கைவிட்டது என்ற மெத்த வருத்தம் எனக்கு உள்ளது. ஆனாலும் காட்பாடி தாராபடவேட்டிலிருந்து விருதம்பட்டு வரைக்கும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுகள், ஒருவழியாக உருட்டிபெறட்டி கடைசியில் தபால் ஓட்டுகளில் தான் நாம் வெற்றி பெற்றோம் என சொல்லலாம்.

“நான் சொன்ன வாக்குறுதிகளான பொன்னையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொன்னை ஆற்று மேம்பாலம் கண்டிப்பாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News