செய்திகள்
நாங்குநேரி இடைத்தேர்தல்

நாங்குநேரி இடைத்தேர்தல்: முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம் என தி.மு.க. புகார்

Published On 2019-10-13 14:39 GMT   |   Update On 2019-10-13 14:39 GMT
நாங்குநேரி தொகுதியில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 24-ந் தேதி நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில் பிரதான கட்சிகள் சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராஜநாராயணன் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் பனங்காட்டு படை கட்சி ஹரி நாடார் உள்ளிட்ட 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 23 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்காக இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்றபோதும் இதுபோன்ற சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News