ஆன்மிகம்
திருஅறையில் விளக்கு ஏற்றி வைத்திருந்ததையும், அதனை தரிசிக்கும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் காணலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்

Published On 2021-02-01 06:34 GMT   |   Update On 2021-02-01 06:34 GMT
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டு கொண்டு சித்திபெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும்.

அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி(பேழை) மற்றும் உருவப்படம் மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்க குடும்பத்தினர் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை முன் பெட்டியை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில் மதியம் 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க திருஅறை தரிசனம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகா மந்திரத்தை உச்சரித்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News