செய்திகள்
போராட்டம்

மயிலாடுதுறையில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை- இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-15 11:00 GMT   |   Update On 2021-09-15 11:00 GMT
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

நீட் தேர்வு அநீதியால் தமிழகத்தில் மாணவர் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தற்போது பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் கிட்டத்தட்ட இருபது மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

ஒன்றிய அரசின் காவி கார்பரேட் கொள்கையின் அடிப்படையில் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாக தமிழகத்திற்கு பொருந்தாத நீட் தேர்வை மத்திய அரசு இங்கு திணித்து வருகிறது. தமிழக மக்களோடு இந்திய மாணவர் சங்கமும் கடந்த ஐந்தாண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு கொடூர மனதுடன் செவிசாய்க்க மறுத்து வருகிறது. தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை உறுதியுடன் வெளிப்பட்டது. தேர்தல் முடிவுகளில் இதன் தாக்கத்தால் அதிமுக கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம் நீட் தேர்வை ரத்து செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது 84 ஆயிரம் மக்களிடம் கருத்து கேட்டதில் சுமார் 70 விழுக்காடு மக்கள் நீட் தேர்வை வேண்டாமென உறுதியுடன் கூறியுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டு மாணவர்கள் இறப்பு நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை மேலும் தீவிரபடுத்தியுள்ளது. தமிழக அரசு நீட்டிற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக அரசை போன்று சட்டம் நிறைவேற்றுவதோடு மட்டும் இல்லாமல் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசும் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மன உறுதிக்கான வகுப்புகளை எடுக்க வேண்டும். இது அரசின் தவறான முறையற்ற தேர்வு நடவடிக்கை என்ற வகையில் இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைராஜன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கார்த்தி பிரவீன் தவசி பிரகாஷ் ஆகியோர் பேசினர். இறுதியாக மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ நிறைவுரையாற்றினார்.
Tags:    

Similar News