செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Published On 2021-06-07 10:18 GMT   |   Update On 2021-06-07 10:18 GMT
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வீதிகள் தோறும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தடுப்பு பணியில் உள்ளாட்சி நிர்வாகங்களின் பங்களிப்பு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கையால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கிராமங்களில் தங்கள் வார்டுகளில் தொற்று கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தேவையான உதவியை செய்து தரும் பொறுப்பை ஊராட்சி தலைவர்கள் ஏற்றுள்ளனர். வார்டு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப் பினரை இணைத்து, தொடர் கண்காணிப்பு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வீதிகள் தோறும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வப்போது முழு சுகாதார பணி மேற் கொள்வது, கபசுர குடிநீர் வழங்குவது, காய்கறி அத்தியாவசிய பொருள் வினியோகத்தை உறுதிப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான ஊராட்சி உறுப்பினர்கள், துணைத் தலைவர் மற்றும் தலைவர்கள், மக்களிடம் நற்பெயர் வாங்க, தங்களின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இதை கருதுகின்றனர்.

தங்களின் சொந்த பணத்தை செலவழித்தும் கூட களப்பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சிகளில் களப் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், ஒரு சில ஊராட்சிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இத்தகைய சூழல் இல்லை.

அத்தனை பணிகளையும் அதிகாரிகள், அலுவலர்களே தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக் குறையால், அன்றாட பணிகளில் கூட கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கிராமப்புறங்களுக்கு இணையாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணியை வேகப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

Tags:    

Similar News