ஆன்மிகம்
தாமிரபரணி ஆற்றில் புஷ்கரவிழா 4-ந்தேதி நடக்கிறது

தாமிரபரணி ஆற்றில் புஷ்கரவிழா 4-ந்தேதி நடக்கிறது

Published On 2019-10-30 05:37 GMT   |   Update On 2019-10-30 05:37 GMT
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோவிலையொட்டி உள்ள தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கரவிழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரவிழா 10 நாட்கள் நடந்தது. இதையொட்டி மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோவிலில் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மகா புஷ்கரவிழாவை தொடர்ந்து அந்த்ய புஷ்கரவிழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் திருப்பள்ளி எழுச்சி, தேவிமகாத்மிய பாராயணம், தொடர்ந்து புனித நீராடல், கலசபூஜை அபிஷேகம் போன்றவை நடக்கிறது.

மேலும் மகா தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த விழாவில் வேளகுறுச்சி ஆதினம் தேவதேசிக பரமாச்சாரியார், செங்கோல் ஆதினம் தேசிக சத்யஞான பரமாச்சாரியார் உள்பட மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் செயல் அலுவலர் அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இந்து முன்னணி, ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News