உள்ளூர் செய்திகள்
மழை

ஈரோட்டில் பலத்த மழை- மலைப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2021-12-04 05:04 GMT   |   Update On 2021-12-04 05:04 GMT
மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு:

ஈரோட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ராஜன் நகர், அரியப்பம்பாளையம், கடம்பூர், ஆசனூர், பண்ணாரி மற்றும் வனப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது.

இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் செல்லும் வழியில் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு பஸ் நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகரில் தூறிக்கொண்டு இருந்த மழை திடீரென காலை 8.30 மணி அளவில் பலத்த மழையாக கொட்டியது.

இதேபோல் அந்தியூர், தவிட்டுப்பாளையம், பர்கூர், பவானி, சென்னிமலை, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், கடம்பூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

மழை காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரி சென்ற மாணவ- மாணவிகள் அவதி அடைந்தனர். அவர்கள் குடை பிடித்தபடி சென்று வந்தனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடம்பூர், பர்கூர், ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலை பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது.

தொடர்ந்து மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News