செய்திகள்
சயானி கோஷ்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயானி கோஷ்க்கு ஜாமீன்

Published On 2021-11-22 13:50 GMT   |   Update On 2021-11-22 13:50 GMT
திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
அகர்தலா:

நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவருமான சயானி கோஷ், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் பிரசார கூட்டத்திற்கு இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து சயானி கோஷை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து சயானி கோஷ் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சயோனி கோஷ்க்கு இன்று ஜாமீன் வழங்கியது. 



இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி அகர்தலாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக குற்றம்சாட்டினார். 

‘வாக்குச்சாவடிக்கு வருவதை உறுதிசெய்ய பாஜக கொடியை ஏந்த வேண்டும் என்றால், அதைச் செய்யுங்கள். குண்டர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். ஆனால் வளர்ச்சிக்கு ஆதரவான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று அபிஷேக் பானர்ஜி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News