ஆன்மிகம்
இயேசு

புது வாழ்வின் ரகசியம் என்ன?

Published On 2020-08-21 08:58 GMT   |   Update On 2020-08-21 08:58 GMT
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று 1 யோவான் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புது வாழ்வின் ரகசியம் என்ன? என்பதை சற்று தியானித்து பார்ப்போம்.

புதிதாக வந்த அதிகாரி ஒருவர் கப்பல் துறைமுகத்தை பார்வையிட சென்றிருந்தார். அங்கே குற்றவாளிகளால் இயக்கப்படும் கப்பல் ஒன்றைக்கண்டார். அதில் ஏறி அதிகாரி அங்கிருந்த குற்றவாளிகளைக் கண்டு அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். என்ன காரணங்களினால் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக்கூறி தாங்கள் தவறும் ஏதும் செய்யவில்லை என்றும் நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் கூறினார்கள். கடைசியாக ஒருவன் மட்டும் ஐயா! நான் பணப்பையை திருடி போலீசிடம் பிடிபட்டேன். எனவே இங்கே குற்றவாளியாக தண்டனையை அனுபவிக்கிறேன் என்றான். உடனே அந்த அதிகாரி அவனை பார்த்து குற்றம் செய்தவர்கள் அனைவரும் அவர்கள் குற்றங்களை மறைத்துவிட்டனர். ஆனால் நீயோ செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டபடியினால் உன்னை நான் விடுதலை செய்கிறேன் என்று கூறி அவனை விடுதலை செய்து விட்டார்.

ஆம் பிரியமானவர்களே, பொதுவாக தவறுகளை மறைப்பது மனித இயல்பு, நாம் செய்யும் தவறை மறைக்கும் செயல்களில் ஈடுபடும் போது தவறுக்கு மேல் தவறு செய்யும்படியான சூழல்கள் ஏற்பட்டு விடுகிறது. வேத வசனத்தில்,‘பாவம் இல்லை என்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே மேற்கண்ட சம்பவத்தில் தவறை ஒப்புக்கொண்டதினால் விடுதலை பெற்ற மனிதனைப்போல நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுக்கு பிரியமில்லாததை செய்தோம் என்றால் அவற்றை ஒப்புக்கொள்வோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று 1 யோவான் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இந்த தவக்காலத்தில் நம்முடைய தவறுகளை தேவனிடத்தில் அறிக்கையிட்டு புது வாழ்வு வாழ ஆயத்தமாவோம் எனபதே புதுவாழ்வின் ரகசியமாகும்.

சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
Tags:    

Similar News