செய்திகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் மு.க. ஸ்டாலின் உடல் நலம் விசாரித்த காட்சி.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை மு.க.ஸ்டாலின் பார்த்தார்

Published On 2019-10-06 08:37 GMT   |   Update On 2019-10-06 08:37 GMT
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மட்டும் 200-க்கும் மேற் பட்டோர் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மட்டும் 31 பேர் டெங்குவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தார். அவர்களிடம் நலம் விசாரித்தார். அந்த வார்டு முழுவதும் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை விவரங்களை விவரித்து கூறினார்கள்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நான் நேரடியாக வந்து சந்தித்தேன்.

 


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் ஆயிரக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு நூற்றுக் கணக்கான குழந்தைகள் உயிர் பலி ஆன கொடுமையும் நடந்துள்ளது.

இங்கு மட்டும் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 17 பேர், பெண்கள் 16 பேர் உள்ளனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கை இந்த அரசு வெளிப்படையாக தர முடியாத சூழ்நிலையில் ரொம்ப சுலபமாக மர்ம காய்ச்சல் என்று ஒரு தவறான பிரசாரத்தை தொடர்ந்து இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சையை அளித்திட வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த நோயை பற்றி கூறும்போது, பெரிய நகைச்சுவையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கொ.மு., கொ.பி. அதாவது கொசுவுக்கு முன்னால், கொசுவுக்கு பின்னால் என்று ஒரு நகைச்சுவையை சொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கவலைப்படாமல், இப்படி கூறி இருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

இந்த நோய் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாத ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது. ஆகவே தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நோயாளிகளை நேரில் பார்த்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் சந்தித்து சிகிச்சையை வேகப்படுத்த கேட்டுக் கொண்டேன்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வரும் என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன்.

இந்த அரசு முதல்- அமைச்சர் படத்தையும், பிரதமர் படத்தையும், கட்-அவுட்டாக வைத்து பேனர் வைக்க, நீதிமன்றம் சென்று அனுமதி கேட்கக் கூடிய நிலையில், நீட் தேர்வுக்கு ஏன்? நீதிமன்றம் செல்லவில்லை என்பது தான் எனது கேள்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News