செய்திகள்
மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2021-01-22 10:36 GMT   |   Update On 2021-01-22 10:36 GMT
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

“மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது” என்று புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு போல் ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொருபுறம், ஏதாவது ஒரு வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்து விடத் துடிக்கிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை வழங்காமல் மாநில ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்தாலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும் போது, அவரின்கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழக மசோதா தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்ட நிலையில் புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்து தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போராடிப் பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்திலும் -புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News