செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ராமதாஸ்

அதிமுக-பாமக கூட்டணி உறுதியானது: எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் இன்று சந்திப்பு

Published On 2021-02-06 09:03 GMT   |   Update On 2021-02-06 09:03 GMT
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறது.

இதனால் கூட்டணியை உறுதி செய்வதில் இழுபறி நிலவியது.

அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் டாக்டர் ராமதாசை நேரில் சந்தித்து 3 முறை பேசினார்கள். இருப்பினும் இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே கூட்டணி பற்றி பேச முடியும் என்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

இதனால் கூட்டணியை உறுதிப்படுத்த முடியாமலும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்க முடியாத சூழ்நிலையும் உருவானது.

டாக்டர் ராமதாசின் கோரிக்கைகளை பா.ம.க. குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில் மீண்டும் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 20 சதவீத தனி இடஒதுக்கீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி அமைச்சர்களுடன் பா.ம.க. குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.

பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ், பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன், வக்கீல் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 3 மணி நேரம் அமைச்சர் தங்கமணி வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் இட ஒதுக்கீடு சதவீதம் வழங்குவதில் சிக்கல் நீடித்ததால் இழுபறி ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை விவரங்களை பா.ம.க. குழுவினர் டாக்டர் ராமதாசிடமும், அ.தி.மு.க. குழுவினர் எடப்பாடி பழனிசாமியிடமும் அவ்வப்போது தெரிவித்து ஆலோசனைகள் பெற்று வந்தனர்.

அந்த ஆலோசனைகளின் படி இரு கட்சி குழுக்களும் கடந்த 2 நாட்களாக தினமும் இரவில் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வந்தன.

உள் ஒதுக்கீடு வழங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்து உள்ளார்.

அப்போது இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது இடஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கூட்டணி அறிவிப்புகளை இருவரும் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சட்டநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News