செய்திகள்
பணம்

ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடி மோசடி- 3 ஊழியர்கள் சஸ்பெண்டு

Published On 2021-10-27 06:27 GMT   |   Update On 2021-10-27 06:27 GMT
ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆரணி:

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி உயர் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தேவிகாபுரம் சாலையில் உள்ள ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் தணிக்கை குழுவினர் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வங்கியில் கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கவரிங் நகைகளை 70 பேரின் பெயரில் ரூ.2 கோடியே 39 லட்சத்திற்கு நகை கடன் பெற்றதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.



இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆரணி கூட்டுறவு நகர வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் ஊழியர்கள் சரவணன், ஜெகதீஸ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News