செய்திகள்
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருப்பூர் உண்ணாவிரதத்தில் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-11-26 10:47 GMT   |   Update On 2021-11-26 10:47 GMT
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு ரூ.5, ரூ.10 வரை விலை உயர்ந்தது. நூல் கிடைக்காத தட்டுப்பாடு நிலை இருந்தது.
திருப்பூர்:

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இன்று பின்னலாடை தொழில் துறையினர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில் பஙகேற்ற ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

கடந்த மாதம் ரூ.300ஆக இருந்த ஒரு கிலோ நூல் விலை தற்போது ரூ.350ஆக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை மட்டும் அதிகபட்சமாக ரூ.20 உயர்த்தப்பட்டது. அதன்பின் ரூ.5, ரூ.10 என்ற அளவில் விலை உயர்வு இருந்து வந்தது. தற்போது ரூ.50 விலை உயர்வு என்பது மிகவும் அதிகமாகும். இதற்கு மூலகாரணமாக பருத்தியின் விலை அதிகமானதே ஆகும். இதனால் ஆடைகள் விலை உயரும். 

ஏற்றுமதி ஆர்டர்கள் 3 மாதம், 4 மாதங்களுக்கு முன்னதாக மாதிரி காண்பிக்கப்பட்டு ஆர்டர்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு பனியன் நிறுவனங்களை முற்றிலும் பாதிக்கும். பருத்தியின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை உயர்வது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக தெரியவில்லை .

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு ரூ.5, ரூ.10 வரை விலை உயர்ந்தது. நூல் கிடைக்காத தட்டுப்பாடு நிலை இருந்தது. உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையை விட ஏஜெண்டுகளிடம் கூடுதலாக விலை கொடுத்து வாங்கும் சூழல் இருந்தது. நூல் வரத்து சரியான பிறகு திடீரென ரூ.50 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1-ந் தேதி  நூல் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தியது.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை ஒரே சீராக தொடர்கின்றன. இந்த நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதில் 20-ம் நம்பர் கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக) ரூ. 305, 24 ஆம் நம்பர் ரூ. 315, 30ஆம் நம்பர் நூல் ரூ. 325, 34 ஆம் நம்பர் ரூ. 345, 40ஆம் நம்பர் ரூ. 365, 20ஆம் நம்பர் செமிகோம்டு ரக நூல் ரூ. 295, 24-ம் நம்பர் ரூ. 305, 30-ம் நம்பர் ரூ.315, 34-ம் நம்பர் ரூ. 335, 40-ம் நம்பர் ரூ. 355 ஆகவும் விலை உள்ளது.

பஞ்சு விலை அதிகரிக்க காரணம் பஞ்சை ஏற்றுமதி செய்வதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதேபோல் வர்த்தகத்தில் ஈடுபடுபவர் பதுக்குவதால் தட்டுப்பாடு நிலவுகிறது. 3 சதவீதமாக இருந்த இறக்குமதி பஞ்சிற்கான வரி 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் செயற்கை தட்டுப்பாடே விலை ஏற்றத்துக்கு காரணம். இந்தியாவில் மொத்தம் உள்ள நூற்பாலைகள் 2049. தமிழகத்தில் மட்டும் 850 மில்கள் உள்ளன.

சுமார் 45 சதவீத மில்கள் தமிழகத்தில் தான் உள்ளது. ஜவுளித்தொழில் உள்ள ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், கோவை போன்ற தொழில் நகரங்களில் நூல் தான் முக்கிய மூலப்பொருள்.

ஆனால் இதன் விலை கடந்த 10 மாதத்தில் ரூ. 120 முதல் ரூ. 180 வரை உயர்ந்துள்ளது. ஜவுளித்தொழில் அழிவுப்பாதையில் உள்ளது. ஜவுளித் தொழிலை மீட்டெடுக்க வேண்டும். முக்கிய தொழில் ஆதாரமாக திகழும் நூல் விலை உயர்வு தொடர்பாக நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News