செய்திகள்
கோப்புபடம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 6,958 மாணவ-மாணவிகள் ‘ நீட்’ தேர்வு எழுதினர்

Published On 2020-09-14 10:07 GMT   |   Update On 2020-09-14 10:07 GMT
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 6,958 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 1,412 பேர் பங்கேற்கவில்லை.
வேலூர்:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 370 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வி.ஐ.டி., கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, சன்பீம் பள்ளி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, ஸ்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளி., ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 15 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வு மையங்களின் நுழைவு வாயிலில் மாணவர்கள் கைகளை கழுவும் வசதி மற்றும் ஹால்டிக்கெட், புகைப்படங்களை சரிபார்க்கும் நேரத்தில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்பதற்காக கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. தேர்வு மையங்கள், அறைகளை கண்காணிக்கும் பணியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று 1,395 பேர் ஈடுபட்டிருந்தனர்.

தேர்வு மையங்களுக்கு காலை 10 மணி முதல் மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினார்கள். 11 மணி முதல் அவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்த மாணவர்களின் ஹால்டிக்கெட், புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றை தேர்வு மைய அலுவலர்கள் சரி பார்த்து அனுமதித்தனர். செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ரானிக் சாதனங்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

முழுக்கை சட்டை, தொப்பி அணிந்து வந்த ஆண்கள், செயின், கம்மல், மூக்குத்தி, வளையல், தாலி அணிந்து வந்த பெண்களுக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவர்கள் கைகளை கழுவிய பின்னர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தெர்மல் கருவியால் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து சேர்ந்தனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை 6,958 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,412 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 83.1 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

வேலூரில் உள்ள தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சரவணன் நேரில் பார்வையிட்டார். வேலூர் சாய்நாதபுரம் டி.கே.எம். மகளிர் கல்லூரி, வி.வி.என்.கே.எம். ஆகிய தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு டாக்டர், 2 நர்சுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். மேலும் மையத்தின் அருகே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. மாணவர்களின் பெற்றோர் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களின் அருகே இடைத்தரகர்களின் நடமாட்டம் உள்ளதா என்று போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். மாணவ-மாணவிகள் வரிசையாக தேர்வு மையங்கள் செல்வதற்கான ஒழுங்குப்படுத்துதல், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். காட்பாடி சன்பீம் பள்ளி தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு காட்பாடி தன்னார்வக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, துர்காமகால் சுரேஷ் ஆகியோர் உணவு வழங்கினர்.

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அரியூர் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களை போக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்வு கட்டுபாட்டு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News