செய்திகள்
அசோக் கெலாட்

மறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து

Published On 2020-08-12 10:24 GMT   |   Update On 2020-08-12 10:40 GMT
சச்சின் பைலட் தலைமையிலான எம்.எல்.ஏ.-க்கள் ராஜஸ்தான் திரும்பியுள்ள நிலையில் மறப்போம், மன்னிப்போம் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்தார். அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் 18 எம்.எல்.ஏ.-க்களுடன் போர்க்கொடி தூக்கினார். பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் சச்சின் பைலட் சமரசம் அடையவில்லை. இதனால் அசோக் கெலாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது. சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து தூக்கினார்.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வெளி மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். பலமுறை சட்டசபையை கூட்ட அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தார். இறுதியாக நாளைமறுநாள் சட்டசபையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சச்சின் பைலட் ராகுல் காந்தியை திடீரென சந்தித்தார். அதன்பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் நீடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பிய நிலையில் மறப்போம், மன்னிப்போம் என்று அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாக் கெலாட் கூறுகையில் ‘‘கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் சென்றபின், உண்மையிலேயே வருத்தப்பட்டார்கள். ஒவ்வொருவரும் இதில் இருந்து கடந்து செல்ல வேண்டும். மறப்போம், மன்னிப்போம். அவர்களிடம் மக்களுக்காகவும், மாநிலங்களுக்காகவும், நாட்டிற்காகவும் பணியாற்றும்போது சகிப்புத்தன்மை தேவை என்று தெரிவித்தேன்.

தவறுகளை நாம் மன்னிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆபத்து, 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் இருக்கிறார்கள். இது ஜனநாயத்திற்கு எதிரான போர். கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் செய்தது பா.ஜனதா செய்ய நினைத்து தோல்வியை சந்தித்துள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News