செய்திகள்
கோப்புப்படம்

மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை பணி 90 சதவீதம் நிறைவடைந்தது: விரைவில் சோதனை ஓட்டம்

Published On 2020-10-14 02:43 GMT   |   Update On 2020-10-14 02:43 GMT
மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
ஆண்டிப்பட்டி:

மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 90 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரெயில் பாதையில், முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையேயான 37 கிலோ மீட்டர் தூரத்திற்கான அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து தேனி வரை 33 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் மலையை குடைந்து அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைகளை குடைந்து எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தற்போது கணவாய் மலையை குடைந்து அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன்மூலம் மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரையில் இருந்து தேனி வரையிலான 73 கிலோ மீட்டர் தூர பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, சிக்னல் பரிமாற்றத்திற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டு ரெயில் சேவைக்கு அந்த ரெயில் பாதை தயாராக உள்ளது. மீதமுள்ள பணிகளும் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன், மதுரை- தேனி இடையே விரைவில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேனியில் இருந்து போடி வரை ரெயில் பாதை அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News