செய்திகள்

தபால் ஓட்டு விவரங்களை பதிவேற்றம் செய்யுங்கள் - தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-05-17 21:33 GMT   |   Update On 2019-05-17 21:33 GMT
அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சாந்தகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதால், ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்பதற்காக 1¼ லட்சம் ஊழியர்கள் தபால் மூலம் ஓட்டுபோடுவதற்கான படிவங்கள் வழங்கப்படவில்லை. எனவே, விடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் மூலம் ஓட்டுபோட அனுமதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தேர்தல் பணியில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 915 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன” என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், “அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News