லைஃப்ஸ்டைல்
கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் இதய பாதிப்புகள்

கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் இதய பாதிப்புகள்

Published On 2020-11-08 08:22 GMT   |   Update On 2020-11-08 08:22 GMT
கோவிட்-19 மற்றும் இதயம் தொடர்பான நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிவின் வில்சன் கூறியதாவது
கொரோனா நோய் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படுகிற உடல் உறுப்புகளில் இதயமும் ஒன்றாகும். அமெரிக்க மருத்துவ அமைப்பு இதய பிரிவின் (ஜெ.ஏ.எம்.ஏ.) சார்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கொரோனா நோயின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ஏறத்தாழ 78 சதவீதம் பேர் வரையில் இதய நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே இதய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான புதிய சான்றுகளும் கிடைத்துள்ன. ஆகையால் கோவிட்-19 மற்றும் இதயம் தொடர்பான நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிவின் வில்சன் கூறியதாவது:-

நோய் இல்லாதவர்களை விட இதய நோயாளிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவா என்று கேட்டால் இல்லை. இந்த நோய் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். என்றாலும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவர்களில் முன்பாகவே இதய நோய் உள்ளவர்களுக்கு வியாதியின் கடுமையும், பாதிப்பும் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. சீனாவின் மருத்துவ ஆய்வறிக்கையில் நீரிழிவு நோயாளிகள் (9.2 சதவீதம்), புற்று நோயாளிகள் (7.6 சதவீதம்) உள்பட மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட இதய நோயாளிகளின் இறப்பு விகிதம் (13.2 சதவீதம்) அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதய பாதிப்புகள் என்ன?

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு ஏற்படுகிற வாய்ப்புகளும் உண்டு. கொரோனா நோய் தொற்றினால் ஏற்படுகிற மற்ற இரண்டு இதய பாதிப்புகள் இதய செயல் இழப்பு மற்றும் சீரற்ற துடிப்பு (அரித்மியா) ஆகும். நுரையீரலில் ஏற்படுகிற அதிகப்படியான அழுத்தம் அல்லது மயோகார்டிடிஸ் எனப்படுகிற இதய வீக்கம் காரணமாக இதய செயல் இழப்பு ஏற்படலாம். சீனாவின் உகான் பகுதியில் இருந்து வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 16.7 சதவீதம் பேருக்கு சீரற்ற இதய துடிப்பு பாதிப்பும் மற்றும் 19.7 சதவீதம் பேருக்கு பாதிப்புகளும் உள்ளது தெரியந்துள்ளது.

நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்தவோ அல்லது அதில் மாற்றம் செய்யவதோ அதிக பாதிப்புகளை தரக்கூடும். இந்த மருந்துகள் இதய செயல் இழப்பினை தவிர்த்தல் மற்றும் அதிக ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்துகளாகும். உங்களது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உங்கள் மருந்துகளில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்தால் அது உங்களது இதய பாதிப்பினை மேலும் தீவிரமாக்கிவிடக்கூடும்.உங்களது மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி காணொலி வாயிலாகவோ அல்லது மருத்துவமனைக்கு நேரடியாகவோ சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சூழ்நிலையில் நேரடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இப்போதும் அவசியமாக உள்ளது. எனவே இதனை தவிர்க்காமல் முதலில் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் அவசியம்.

நாம் செய்ய வேண்டியவை என்ன?

வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். எனவே அவர்கள் மார்பு எக்ஸ்ரே, இ.சி.ஐ., எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இதய நோய் இல்லாத இளம் வயதினராக இருப்பினும் அவர்களும் நெஞ்சு வலி, உடல் சோர்வு, ஜீரணக்கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் நிச்சயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புகை பிடிப்பதை கைவிட்டு தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் ஆகியவை பலன்தரும் சிறந்த பயிற்சியாகும்.

சத்தான உணவுகளை

இதய நோயாளிகளாக இருப்பின் அவர்கள் கட்டாயம் அவர்களது மருத்துவரால் அளிக்கப்படுகிற காணொலி வாயிலான மருத்துவ ஆலோசனை அல்லது நேரடி மருத்துவ ஆலோசனையினை பெற வேண்டும். இதய பாதிப்புகள் இல்லாதவர்களாக இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உடனேயே தங்களது வழக்கமான வாழ்க்கைக்கு அவசரமாக திரும்புதல் கூடாது.

முறையாக ஓய்வு எடுத்து சரியான சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக பராமரித்த பின்னரே அவர்கள் தங்களை வழக்கமான வாழ்க்கைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

தலைவலியாக இருந்தாலும் சரி அல்லது மூச்சு திணறலாக இருந்தாலும் சரி உங்களது உடலில் காட்டுகிற எந்தவொரு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் பிவின் வில்சன்
Tags:    

Similar News