செய்திகள்
பூரண குணமடைந்து ஆக்ரோஷத்துடன் காணப்படும் புலி.

27 நாட்களாக தொடர் சிகிச்சை- ஆட்கொல்லி புலி பூரண குணமடைந்தது

Published On 2021-11-13 07:26 GMT   |   Update On 2021-11-13 07:26 GMT
மசினகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலிக்கு மைசூரு மறுவாழ்வு மையத்தில் 27 நாட்களாக தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் பூரண குணமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் கூடலூர் வனச்சரகத்தில் தேவன்- 1 பகுதியில் 1 ஆண்டுக்குள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 4 பேரை புலி தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என கூடலூர், மசினகுடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 3 வாரங்களுக்கும் மேலாக ஆட்கொல்லி புலியை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் இரும்புக் கூண்டில் அடைத்தனர். அப்போது புலியின் உடலில் காயங்கள் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆண் புலிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஆட்கொல்லி புலி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று 27- வது நாளாக ஆட்கொல்லி புலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை காலத்தில் உயிருடன் கோழிகள் மற்றும் மாட்டு இறைச்சிகள் புலிக்கு உணவாக வழங்கப்பட்டன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள புலி இரையை நன்கு சாப்பிட்டு வருகிறது. மேலும் அதன் உடலிலுள்ள காயங்களுக்கு கர்நாடக வன கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் புலியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மசினகுடி வனத்தில் பிடிபட்ட புலி தொடர் சிகிச்சையால் பூரண குணம் அடைந்து உள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.

Tags:    

Similar News