செய்திகள்
கோப்புபடம்

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2021-04-05 05:07 GMT   |   Update On 2021-04-05 05:07 GMT
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனது தாயாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ஆவடி:

சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (வயது 19). பி.காம் படித்துள்ளார். இவருக்கும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச்சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பாலமுருகனும், அவருடைய தாயார் அம்சாவும் தங்களது வீடு கடன் வாங்கி கட்டப்பட்டுள்ளது. எனவே பணம் தேவைப்படுவதால் உனது பெற்றோரிடம் கூடுதல் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோதிஸ்ரீ தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோதிஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது சான்றிதழ்கள் மற்றும் துணிகளை எடுப்பதற்காக ஜோதிஸ்ரீ, திருமுல்லைவாயலில் உள்ள தனது கணவர் வீடடுக்கு வந்தார். அப்போது அவருடைய மாமியார் அம்சா, மருமகள் ஜோதிஸ்ரீயை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. அதையும் மீறி ஜோதிஸ்ரீ வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த ஜோதிஸ்ரீ, அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தபோது ஜோதிஸ்ரீ தனது தாயாருக்கு எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் அவர், “நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா?. பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார். எல்லாவற்றையும் நான் சொல்ல முடியவில்லை. நான் போகிறேன். எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான். அவர்களை சும்மா விடாதீர்கள்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜோதிஸ்ரீயின் தாயார் உமா அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் அம்சா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜோதிஸ்ரீக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News