உலகம்
இலங்கை கொடி

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு

Published On 2022-01-29 09:55 GMT   |   Update On 2022-01-29 09:55 GMT
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொழும்பு:

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் பயங்கரவாத செயல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரண்டின்றி கைது செய்யவும், வீட்டை சோதனையிடவும் போலீசாருக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மனித உரிமையை மீறலாக இருப்பதாகவும், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப திருத்துமாறும் ஐ.நா. மனித உரிமை கமி‌ஷன் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறும்போது, ‘பயங்கரவாத தடை சட்டம் 43 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச விதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின்படி பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்பு காவல் உத்தரவு, கட்டுப்பாடு உத்தரவு, நீண்டகால தடுப்பு காவலில் வைக்கப்படுவதை தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான வழக்குகளை விரைவில் தீர்ப்பது.

சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்து செய்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு ஜாமீன் வழங்குதல் போன்ற பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

சந்தேக நபர்கள் தங்களது அடிப்படை உரிமை மீறப் படுவதாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் கோரலாம். தடுப்பு காவல் காலம் 18 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்படுகிறது. காவலில் உள்ள நபர்கள் சட்ட ஆலோசனைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதையடுத்து இலங்கை அரசு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்தம் கொண்டு வருகிறது.

Tags:    

Similar News