ஆன்மிகம்
திருப்பரங்குன்றத்தில் சட்டத்தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

குன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி

Published On 2019-11-04 06:01 GMT   |   Update On 2019-11-04 06:01 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக முருகப்பெருமான் சட்டத்தேரில் பவனி வந்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 1-ந் தேதி வேல் வாங்குதலும், 2-ந் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றது. இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.

பின்னர் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் எழுந்தருளினார்.



காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து சட்டத்தேரினை வணங்கி வடம் பிடித்து இழுத்தனர். காலை 8.50 மணிக்கு நிலையில் இருந்து சட்டத் தேர் நகர்ந்தது. சன்னதி தெரு, கீழரதவீதி, பெரிய ரதவீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்தது. 10.45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இதனை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பை கழற்றிவிட்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.

திருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சம்ஹாரம் செய்த உக்கிரத்தை தணிக்கும் விதமாக வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு நேற்று மல்லிகை மலர்களால் வெள்ளைசாத்துப்படி அலங்காரமும் செய்யப்பட்டது.
Tags:    

Similar News