செய்திகள்
விபத்தில் பலியான மாணவர்கள் சிவா, தரனேஷ்.

ஈரோடு அருகே விபத்து- லாரி மோதி 2 மாணவர்கள் பலி

Published On 2019-09-10 04:24 GMT   |   Update On 2019-09-10 04:24 GMT
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த சித்தோடு டெலிபோன் நகரை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி விசாகவேல் மகன் தரனேஷ் (வயது 15). சாணார் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சிவா (வயது 15)

இந்த 2 சிறுவர்களும் சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள்.

மாணவர்கள் 2 பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்து உற்சாகமாக தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். சைக்கிள் இருந்தும் நண்பர்கள் 2 பேரும் சைக்கிளை தள்ளிக்கொண்டே ரோட்டோரமாக பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.

சித்தோடு-பவானி ரோட்டில் சென்ற போது சித்தோடு நோக்கி ஒரு லாரி வந்தது. இந்த லாரி முன்னாள் சென்ற ஒரு காரை முந்த முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த 2 மாணவர்கள் மீதும் அந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்காக போராடினர்.

இதை கண்டதும் லாரி டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் அந்த வழியாக வந்த ஒரு ஆம்புலன்சு அங்கு வந்தது.

ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் சித்தன் ஓடி வந்து 2 மாணவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை கொடுத்தார். ஆனால் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஒன்றாக இணைந்து வீட்டுக்கு சென்ற 2 மாணவர்களும் ஒன்றாகவே உயிர்களை இழந்தசம்பவம் பேரிடியாக இருந்தது. மாணவர்களின் உறவினர்களும் ஊர்காரர்களும் பதறியடித்து கொண்டு ஓடி வந்தனர். உயிரற்ற பிணமாக கிடந்த மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு சித்தோடு போலீசார் விரைந்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் பவானி டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரவு 8.20 மணி வரை 4 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பகுதியில் விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். லாரி டிரைவர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

விபத்தில் பலியான 2 மாணவர்களின் உடல்களும் பவானி அரசு ஆஸ் பத்திரியில் உடல் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. உடல் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி டிரைவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து சித்தோடு போலீசார் லாரி டிரைவர் செல்வராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News