செய்திகள்

தமிழகம் முழுவதும் 2000 ஆபரேஷன்கள் நிறுத்தம்

Published On 2017-05-05 08:23 GMT   |   Update On 2017-05-05 08:24 GMT
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெற வேண்டிய சுமார் 2000 ஆபரே‌ஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை:

சென்னையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. டாக்டர்கள் பணிக்கு வராததால் பெண்கள், முதியவர்கள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குழந்தை பிரசவ ஆபரே‌ஷன், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, மூளம், ஹெர்னியா, டான்சில், குழந்தைகளுக்கான நோய்கள் சிகிச்சை போன்றவை நடைபெறவில்லை.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் இன்று வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் நடத்தினர்.அங்கு 40 அவசரமில்லாத ஆபரே‌ஷன் நிறுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 360 டாக்டர்களில் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவசரம் இல்லா ஆபரேசன்கள் மட்டும் நிறுத்தப்பட்டது.

இன்று கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக இன்று டாக்டர்கள் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புற நோயாளிகள் பிரிவையும் காலையில் 2 மணி நேரம் புறக்கணித்தனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பிருந்து இன்று காலை டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று விட்டு மீண்டும் ஆரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு டாக்டர்கள் இன்று 17-வது நாளாக போராட்டத்தை தொடர்கிறார்கள். 3-வது நாளாக இன்று ஆபரேசன்களை செய்ய மறுத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெறாமல் தள்ளி போடப்பட்டுள்ளது. நோயாளிகள் தினசரி ஆஸ்பத்திரிக்கு வந்து அறுவை சிகிச்சை நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

நேற்று பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர் வாயில் ‘பிளாஸ்திரி’ ஒட்டி, தங்களது ‘ஸ்டெதஸ்கோப்பை’ ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதுபோல இன்று கண்ணை கட்டி நூதன போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தக்கலை, பூதப்பாண்டி, குளச்சல் என்று மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பேறு உள்பட அவசர அறுவை சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது. மற்ற சாதாரண அறுவை சிகிச்சைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் 50 அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவந்துள்ளது. நேற்று குழந்தை பேறு உள்பட 7 அவசர அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இன்றும் அறுவை சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News