செய்திகள்
கோப்புபடம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை நீக்க கோரி சித்தோட்டில் திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-16 14:28 GMT   |   Update On 2020-10-16 14:28 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நீக்கக்கோரி சித்தோட்டில் தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானி:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட நெசவாளர் அணி பொறுப்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் ஈரோடு இறையவன், கோபி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.முருகன் மற்றும் ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் நிதி ஆதாரங்களோடு இயங்கி வருகின்ற அமைப்பாகும். இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,500 கோடி நிதி ஈட்டக் கூடிய சக்தி உள்ளது. எனவே மாநில அரசின் நிதி தேவையில்லை. இதனால் மாநில அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆண்டுக்கு ரூ.1,500 கோடி நிதி ஈட்டக்கூடிய இந்த கல்வி நிறுவனத்தை மத்திய அரசு மறைமுகமாக கையில் எடுக்க சூரப்பாவை பயன்படுத்துகிறது. இதற்கு மாநில அரசு துணை போகிறது. நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் டாக்டராக பணியாற்ற முடியாத நிலையை ஏற்படுத்திய மத்திய அரசு, வருங்காலத்தில் அவர்களை பொறியியல் படிக்க முடியாத நிலைக்கு தள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும்.
Tags:    

Similar News