ஆன்மிகம்
கோமாதா

பசுவடிவில் வந்து பூஜித்த அம்பிகை

Published On 2019-09-04 09:01 GMT   |   Update On 2019-09-04 09:01 GMT
அம்பிகை பசுவடிவில் பூஜித்த சில தலங்கள் உள்ளன. அந்த தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அம்பிகை பசுவடிவில் பூஜித்த சில தலங்கள்...

ஆவுடையார் மேல் பசுவின் பாதக் குளம்பு

ஒருமுறை திருமாலும், சிவனும் பார்வதி தேவியை நடுவராக வீற்றிருக்கச் செய்து சொக்கட்டாக் ஆடிய போது, பார்வதி தேவியார் திருமாலுக்கு சாதகமான தீர்ப்பைக் கூறியதால் சினந்த சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக பிறக்க சாபமிட்டார். அப்படியே பார்வதி தேவியார் திருக்கோழம்ப தலத்தில் பசுவாக பிறந்து. இறைவனை பூஜித்து மீண்டும் சிவனை அடைந்தாள். கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவாவடுதுறைக்கு கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் திருக்கொளம்பியம் என்றும் திருக்குளம்பியம் என்றும் வழங்கப் பெறுகிறது. தேவி பசுவுருவில் வழிபட்டதன் அடையாளமாக இன்றும் இத்தல சிவலிங்க ஆவுடையார் மேல் பசுவின் கால் குளம்புத் தடம் இருப்பதை காணலாம்.

சிவனின் சிரசில் கொம்பு வடு

வில்வராண்ய சேத்திரமாகிய திருக்கொண்டீச்சுரம் நன்னிலத்திற்கு அருகே முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் உள்ளது. அம்பாள் பசு வடிவில் இறைவனைத் தேடி தன் கொம்பினால் நிலத்தை தோண்டி அலைந்த போது ஒரு இடத்தில் இறைவனின் தலையில் பசுவின் கொம்புபட்டு ரத்தம் வழிந்தது. பசு ரூபமான அன்னை பாலைச் சொரிந்து இறைவனை வழிபட ரத்தம் நின்றது. ஆனாலும் கொம்பு பட்ட வழி மறையவில்லை. இன்றும் இங்குள்ள லிங்கத்தின் மீது இந்த வடுவைக் காணலாம். இங்கு சாந்த நாயகியோடு இறைவன் பசுபதீஸ்வரராக தரிசனம் தருகிறார்.

அணைந்தெழுந்த திருவாவடுதுறை


இத்தலத்தில் உள்ள கோமுகி தீர்த்தத்தில் நீராடி அம்பிகை பசு உருவம் நீங்கப் பெற்றாள். அப்போது இறைவன் இறைவியை அணைத்து எழுந்த படியால் இங்குள்ள மூர்த்தி அணைத்தெழுந்த நாதர எனும் நாமத்துடன் விளங்கி, உற்சவ காலங்களில் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். கோமுகி, கோகழி என்ற பெயர்களோடு இத்தலம் வழங்கப் பெறுகிறது.

திருப்பந்தனை நல்லூர்

குத்தாலத்திற்கு அருகேயுள்ளது இத்தலம். ஒரு முறை கலைமகள், அலை மகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் பார்வதி. அவ்வமயம் சிவபெருமான் அங்கு வந்தார். ஆனால் விளையாட்டில் கவனம் செலுத்திய பார்வதி தேவி அவரைக் கவனியாதிருந்தார். இதனால் சினந்த சிவன் பந்தை தன் சடையால் மறைத்து தேவியை பூமியில் பசுவாய் பிறக்க சாபமிட்டார்.

அதன்படியே உமாதேவியார் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு பசு வடிவம் நீங்கப் பெற்றாள். பந்து விளையாடல் காரணமாகவே இத்தலம் பந்தனைநல்லூர் எனப் பெயர் பெற்றதாம். பூபதி சுடாமணி எனும் அரசனால் திருப்பணி செய்யப்பட்ட இத்தலத்து சிவலிங்கத் திருமேனி மிக சிறியது. சிவலிங்கத் திருமுடியில் பசுவின் குளம்பு தழும்பு காணப்படுவது தனிச் சிறப்பாகும். இறைவன் இங்கு காம்பளதோளியம்மை சமேத பசுபதி ஈஸ்வரராக அருள்புரிகிறார்.

இத்தலங்களை தரிசித்து வந்தால் நாமும் நமது பாவங்களும், சாபங்களும் நீங்கி நல்லனயாவும் பெற்று இன்பறலாம்.
Tags:    

Similar News